கோத்தபாயவின் கோரிக்கையை நிராகரித்தார் அமெரிக்கத் தூதுவர் : முற்றுகிறது முறுகல்

michele-j-sisonயு.எஸ்.எயிட் நிறுவனத்தின் பொறுப்பாளரை, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சந்திக்க விடுத்த கோரிக்கையை அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் சில திட்டங்கள் தொடர்பில் பேச்சு நடத்தும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சு அழைப்பு விடுத்திருந்தது. எனினும், இந்த சந்திப்புக்களில் தமக்கும் அழைப்பு விடுக்கப்பட வேண்டுமெனவும், தனியாக யு.எஸ். எயிட் நிறுவன பொறுப்பாளர் மட்டும் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளை சந்திக்கக் கூடாது எனவும் சிசன் உத்தரவிட்டுள்ளார். இதனால் பாதுகாப்புச் செயலாளருக்கும், அமெரிக்கத் தூதுவருக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.
யு.எஸ் எயிட் நிறுவனம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.அரசாங்கத்திற்கு எதிராக மக்களை கிளர்ச்சியடையச் செய்யும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் காத்திரமான தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்கும் நோக்கில் திட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாக அமெரிக்காவின் யு.எஸ். எயிட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த முயற்சியானது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் விரிசலடையச் செய்யும் என கோத்தபாய ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார். திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கிலேயே யு.எஸ் எயிட் பொறுப்பதிகாரியை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அதனை அமெரிக்கத் தூதுவர் தடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்த உரிமையின் அடிப்படையில் அமெரிக்கா இலங்கை அரசியல் நடவடிக்கைகளில் தலையீடு செய்கின்றது என்பதனை தெரிந்து கொள்ளும் உரிமை அரசாங்கத்திற்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் ராஜதந்திரிகள் வடக்கு கிழக்கு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிட அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், அமெரிக்கத் தூதுவர் தன்னார்வ தொண்டு நிறுவன தலைமையதிகாரியை கட்டுப்படுத்தும் காரணத்தினால், எதிர்வரும் காலங்களில் சில கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கத் தூதுவர் சிசனை பின்பற்றுமாறு ஏனைய அமைச்சுக்களிடமும் கோரிக்கை விடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யு.எஸ் எயிட் நிறுவனம் அமெரிக்கத் தூதரகத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருவதாகவும், அதன் பொறுப்பதிகாரியை சந்திக்க வேண்டுமாயின் அமெரிக்கத் தூதுவரும் அந்த சந்திப்பில் பிரசன்னமாகியிருப்பார் எனவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
http://newslnk.com/

No comments:

Post a Comment