முஸ்லிம் பள்ளிவாசல்களில் இனவாதத்தைத் தூண்டக் கூடிய எவ்விதப் பிரச்சாரங்களும் இடம்பெறவில்லை. அங்கு சமாதானம், சகவாழ்வு மற்றும் இனங்களுக்கிடையில் நல்லுறவு போன்ற அழகிய நல்லுபதேசங்களே நிகழ்த்தப்படுவதாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கம்புறுகமுவே வஜிர தேரர் தெரிவித்தார்.
ஜும்ஆத் தினங்களில் முஸ்லிம் பள்ளிவாசல்களில் நிகழ்த்தப்படும் பிரசங்கங்களின்போது இனவாத கருத்துக்கள் பரப்பப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பல தரப்பாலும் சுமத்தப்பட்டன.
இவைகளை நிவர்த்திப்பதற்காக ஜும்ஆப் பிரசங்கங்களை அவதானிப்பதற்காக பௌத்த தேரர்கள் சிலரை பொறல்லை ஜும்ஆப் பள்ளிவாசல் நிருவாம் இன்று வெள்ளிக்கிழமை (18.07.2014) அழைத்திருந்தது. இதில் கலந்து கொண்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கம்புறுகமுவே வஜிர தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், இன்றைய ஜும்ஆப் பிரசங்கம் இஸ்லாம் மார்க்கம் குறித்து பல்வேறு தெளிவைத் தந்துள்ளது. அதாவது, நோன்பின் முக்கியத்துவமும் அதிலடங்கியுள்ள மனிதாபிமான மகத்துவமும் சிறப்பானதாக உள்ளது என்றார்.
அத்தோடு, ஏனைய இஸ்லாமிய கடமைகளான ஹஜ் மற்றும் தொழுகை அதன் முக்கியத்துவம் குறித்தும் சிறந்த விளக்கம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment