பதுளை விவகாரம்; பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாட்டைப் பதிவதில் பொலிஸார் அசமந்தம்

பதுளை லேவர் வீதி (மாஷா) வர்த்தக நிலையம் குண்டர்களால் தாக்கப்பட்டமை தொடர்பில், பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் செய்த முறைப்பாட்டைப் பதிவதில் பதுளைப் பொலிஸார் அசமந்தப் போக்கையே பின்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி முறைப்பாட்டைப் பதிவதற்கு நேற்றுக் காலை 6.00 மணியளவில் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற பாதிக்கப்பட்ட முஸ்லிம் தரப்பினர் பல மணி நேரம் அங்கு அலைக்கைக்கப்பட்டிருக்கின்றனர். பின்பு சுமார் ஆறு மணித்தியாலங்களுக்குப் பிறகு காலை 11.45 மணியளவிலேயே வேண்டா வெறுப்போடு குறித்த பொலிஸார் முறைப்பாடுகளைப் பதிவு செய்திருக்கின்றனர்.CIB 203/200,CIB 205/201 இலக்கங்களில் முறையே இரண்டு முறைப்பாடுகள் அங்கு பதியப்பட்டிருக்கின்றன.
இதேநேரம்,பொலிஸார் குறித்த வர்த்தக நிலையத்திலிருந்து எடுத்துச் சென்ற CCTV கமெராக்கள் ஆய்வுக்காக மொரட்டுவைப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி,இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கும் கடை ஊழியர் அர்ஷாத்தை தொடர்ந்து 14 நாட்கள் தடுப்புக் காவலில்வைக்க பொலிஸார் கேட்டுக்கொண்டிருந்த நிலையில்,அவரை தொடர்ந்து ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க பதுளை மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருக்கிறார்.
குறித்த வர்த்தக நிலையத்திற்கு பொருட்கள் வாங்க வந்த சிங்கள பெண்ணை கடையின் ஊழியர்கள் கையடக்கத் தொலைபேசி மூலம் படம் பிடித்தார்கள் எனத் தெரிவித்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பின்னர் மேற்படி குற்றசாட்டின்பேரில் அர்ஷாத் என்ற ஊழியர் கைது செய்யப்பட்டதோடு, விசாரணை இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.  அர்ஷாத் என்ற இந்த ஊழியர் கடுமையாக தாக்கபட்டிருந்த நிலையில் பொலிசாரினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுமிருந்தார். .
தாக்குதலில் பதுளை பொது பல சேனாவின் முக்கிய உறுப்பினர் என அறியப்பட்ட ஒருவரும் பங்கு பற்றியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.    இது ஒரு திட்டமிடப்பட்ட நாடகம் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் . குறித்த வர்த்தக நிலையத்தில் CCTV கமாராக்கள் பொருத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த CCTV பதிவுகளை பொலிஸார் விசாரனைக்காக எடுத்து சென்றே ,தற்போது அது ஆய்வுக்காக பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னணி இனவாத இயக்கமொன்றின் முன்னணி செயற்பாட்டாளர் என்று அறியப்படும் “மதுரங்க” எனும் மீன் வியாபாரி தலைமையில் சுமார் பதினைந்து பேர் கொண்ட கும்பலே இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.
2014/ 06/10 திகதி மாலை சுமார் 7:30 மணிளாவில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து குறிப்பிட்ட கடையில் சேவையாற்றும் விற்பனை உதவியாளர் ஒருவர் விபரிக்கையில்,
“ மாலை சுமார் 6:00 மணியளவில் இரண்டு யுவதிகள் டெனிம் காற்சட்டை வாங்குவதற்காக எமது கடைக்கு வந்தனர். அவர்களுக்கு பல்வேறு வகையான டெனிம் காற்சட்டைகளை காட்டினோம். அதில் இரண்டை எடுத்துக் கொண்டு “பிட் ஒன்” ( அளவு பார்க்கும் இடத்தை நோக்கி நடந்தார்கள். அவர்களுக்கு குறிப்பிட்ட இடத்தை காட்டிவிட்டு அவர்கள் வரும் வரையில் நாம் ஏற்கனவே எடுத்து காட்டிய காற்சட்டைகளை மடித்துக் கொண்டிருந்தோம்.
அப்போது திடீரென வெளியில் வந்த ஒரு யுவதி, “ஏன் எங்களை போடோ எடுத்தாய்” என்று கேட்ட வண்ணம் குறித்த தனிமை கொடுத்த எனது சக நண்பனிடம் சண்டையிடும் பாணியில் கடும் தொனியில் கத்திக் கொண்டு வெளியில் வந்தார்.
அவருடன் சேர்ந்து மற்ற யுவதியும் வெளியில் வந்தார். அப்போது எனது சக நண்பன் நான் ஏன் உங்களை போட்டோ எடுக்க வேண்டும் என்று தான் அவ்வாறு செய்ய வில்லை என்று மறுத்தார்.
அப்போது நான் உடனே எனது நண்பனின் சட்டை பையிலிருந்த கைதொலைபேசியை எடுத்து , “அப்படி போடோ எடுத்திருந்தால் இதில் எங்கு உள்ளது” என்று எடுத்து காட்டுமாறு வேண்டி கைதொலை பேசிகளை அவர்களிடமே கொடுத்தேன். பின்பு அவர்கள் அதை பார்த்து விட்டு 
“இதில் அல்ல கேமரா ஒன்றை எடுத்து குறிப்பிட்ட ஒரு துணி கட்டின் மேல் வைத்து என்னை போடோ பிடித்தார்கள்” என்று மீண்டும் வேறொரு கதையை கூறினார்கள். 
அப்போது நாம், “அப்படியென்றால் எங்கே அந்த கேமரா என்று நாங்கள் மீண்டும் கேட்ட போது இல்லை நாங்கள் ஆடை மாற்றுவதை பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று இன்னுமொரு கதையை கூறிவிட்டு, நில்லுங்கள் உங்களை கவனித்துக் கொள்கிறேன் என்று எங்களை எச்சரித்து விட்டு வெளியில் சென்றார்கள்.
பின்பு சுமார் 7:30 மணியளவில் குறிப்பிட்ட பெண்களின் தந்தை என்று சொல்லக் கூடிய முதியவர் ஒருவருடன் மீன்கடை மதுரங்க தலைமையில் சுமார் பதினைந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று எமது கடைக்கு வந்தார்கள்.
குறிப்பிட்ட பெண்களின் தந்தை என்று சொல்லக் கூடிய முதியவர் எங்களுடன் கதைக்க முற்பட்ட போது ஏனையவர்கள் கடைக்குள் புகுந்து எங்களை தாக்கினார்கள். குறிப்பிட்ட டெனிம் காற்சட்டைகளை விற்பனை செய்ய உதவி செய்த சக நண்பரை மிகத் தீவிரமாக தாக்கினர். இவர்களின் சிலரின் கைகளில் கம்பு, தடிகள் காணப் பட்டன. மதுரங்க என்பவன் கையிலும் தடியொன்று இருந்தது,” என்று கூறினார்.
இந்தக் கடை உரிமையாளர் மொஹம்மத் ராசிக் (பாபு) அவர்களிடம் இது பற்றி கேட்ட போது. “நான் இந்த நேரத்தில் கடையில் இருக்க வில்லை. நான் கடைக்கு வரும் போது எல்லோரும் அல்லோல கல்லோலபட்டிருந்தனர்.
விடயத்தை அறிந்தவுடன் பதுளை பொலிஸ்  நிலையத்திற்கு பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் சென்றேன். அங்கே குறிப்பிட்ட யுவதிகள் உட்பட ஏனையவர்களும் பொலிஸ்  நிலையத்திற்கு வந்திருந்தார்கள். குறிப்பிட்ட யுவதிகள் தங்களை போட்டோ பிடித்ததாக எமது விற்பனை உதவியாளரை சுட்டிக் காட்டி பொலிஸில் முறைப்பாடு செய்தார்கள்.
அதனடிப்படையில் எமது விற்பனை உதவியாளர் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டார்.
நான் எனது புகாரை  பொலிஸில் பதிவு செய்ய முற்பட்ட போது தடுப்புக் கூண்டில் இருந்த எமது விற்பனை உதவியாளர் தாக்குதல் காரணமாக வருத்தப் பட்டுக் கொண்டிருந்து வாந்தி எடுக்க ஆரம்பித்ததால் உடனே அவரை  பொலிஸ் காவலுடன் வைத்திய சாலையில் சேர்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டது. 
இதன் காரணமாக பொலிஸில்  எனது முறைப்பாட்டை பதிவு செய்ய முடியாமல் போனது. நாளை காலை குறிப்பிட்ட முறைப்பாட்டை பதிவு செய்ய உத்தேசித்துள்ளேன். என்றும் அவர் நேற்றுக் காலை தெரிவித்திருந்த்தார். 
அதேவேளை குறிப்பிட்ட யுவதிகள் சொல்வது போல் நிகழ்வுகள் ஏதும் நடந்திருந்தால் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசி டிவி காமெராவில் நிச்சயமாக அவை பதிவாகி இருக்கும்.
குறிப்பிட்ட சிசி டிவி காமெரா பதிவுகளை பதுளை பொலிஸ் அத்தியட்சகர் பணிப்பில் இரண்டு பொலிஸ்  உத்தியோகத்தர்கள் எடுத்துச் சென்றுள்ளனார்கள் . தக்க சமயத்தில் அவற்றை பிரதி பண்ணிக்கொள்ளக் கூடிய வசதிகள் இல்லாதிருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்
குறிப்பிட்ட விடயம் பதுளை முஸ்லிம்கள் மத்தியில் பதட்ட நிலையை தோற்றுவித்திருந்தது. தற்போது சுமுக நிலை ஏற்பட்டுள்ளது. (ரி) http://www.dailyceylon.com/

No comments:

Post a Comment