அடுத்த சமூகத்தின் நம்பிக்கை கோட்பாடுகளை தெரிந்திருப்பதும், அதனை ஒப்பீட்டு ரீதியாக ஆராய்வதும், கொள்கை விளக்கங்களின் பொழுது பகிர்ந்து கொள்வதும் உலகிற்கு புதிய விடயங்கள் அல்ல, சிலவேளைகளில் இஸ்லாம் வழங்காத அளவு கருத்து வெளியிடல், ஊடக சுதந்திரம் கூட நவீன உலகில் வழங்கப் படுவதனை நாங்கள் காணுகின்றோம்.
என்றாலும், இடம் பொருள் ஏவல் அறிந்து சமயோசிதமாக உரிய தொனியில் பாணியில் பேசுவதற்கும் பிரச்சார யுக்திகளை கையாள்வதற்கும் இஸ்லாம் ஹிக்மத்து எனும் ஞானத்தை வலியுறுத்துகின்றது. அதேபோன்று குறிப்பாக அண்மையில் சில சகோதரர்களால் வெளியிடப்பட்டதாக சொல்லப் படும் கருத்துக்களை அவதானிக்கும் பொழுது அந்தக் கருத்துக்கள் பெரும்பான்மை சமூகத்தின் மனதை புண்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதனை அவதானிக்க முடிகிறது.
"தூங்குபவர்களை எழுப்பலாம் அனால் தூங்குவதுபோன்று நடிப்பவர்களை எழுப்ப முடியாது" என்பது போல, உண்மையிலேயே புரியாதவர்களுக்கு புரிய வைக்கலாம் , புரிந்து கொள்ளவே மறுத்து விடாப்பிடியாக இருக்கும் சொந்த இலக்குகளுடன் கூடிய தீய சக்திகளுக்கு ஒரு போதும் புரிய வைக்க முடியாது என்பதனை நாம் மறந்து விடலாகாது.
"நாங்கள் தவறாக புரியப்பட்டுள்ளோம்" என்ற நிலைப்பாடு சிலவேளைகளில் அடுத்தவர்களின் புரிந்து கொள்ளும் சக்தியையும் குறைத்து மதிப்பிடும் முரண்டு பிடிக்கும் நிலைப்பாடாக வரிந்து கட்டிக் கொண்டுள்ளோர் தூக்கிப் பிடிக்கலாம்.
எங்களால் வெளியிடப்பட்ட ஒரு கருத்து ஏற்படுத்தும் தாக்கங்களை கருத்தில் கொண்டு, குறிப்பாக எரியும் நெருப்பில் தீயை மூட்ட விரும்புகின்ற தீய சக்திகளின் பூதாகரப்படுத்தல்களைக் கருத்தில் கொண்டு , பெரும்பான்மை சமூகத்தின் மிகப் பெரும்பானமையான நல்ல சக்திகளிடம் தங்களைப் பற்றிய தப்பபிபிராயங்கள் உருவாவதை தவிர்த்துக் கொள்வதற்காகவும் இஸ்லாமிய உயர் விழுமியங்களும், முஸ்லிம் சமூகமும் அனாவசியமான விமர்சனங்களிற்கு ஆளாவதிளிருந்து தவிர்ந்து கொள்வதற்கும் குறிப்பிட்ட அமைப்பினர் பெரும் தன்மையோடு தமது வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதில் எந்த வித தவறும், கௌரவக் குறைவும் இருப்பதாக நான் கருதவில்லை, மாறாக அங்குதான் பெரும் தன்மையும் கௌரவமும் அழகிய முன்மாதிரியும் இருக்கின்றன.
தனது சொந்த சமயக் கொட்பாடுகளையே மீறுகின்ற ஞானசார தேரர் போன்று நாங்கள் நடந்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை..அவர் குரானை விமர்சிக்கின்றார் அல்லது இஸ்லாமிய ஷரீஆவை இழிவு படுத்துகின்றார் என்பதற்காக அதே தொனியில் அதே பாணியில் நாம் பெரும்பான்மை சமூகத்தின் மத நம்பிக்கைகளை பகிரங்கமாக விமர்சிக்க வேண்டிய தேவையுமில்லை எமக்கு இஸ்லாம் அவ்வாறு கற்றுத் தரவுமில்லை என்றே நான் விளங்கி வைத்திருக்கின்றேன்.

No comments:
Post a Comment