கடந்த இரண்டு வருடங்களாக தாம் சொன்னவை எல்லாம் உண்மையாகி விட்டதாம்-BBS

இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் செயற்பாடுகள் இடம்பெறுகிறது என கடந்த இரண்டு வருடங்களாக தமது அமைப்பு வெளியிட்டு வந்த தகவல்கள் இன்று ஊர்ஜிதமாகியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையின் கண்டி பிரதேசத்துடன் தொடர்புடைய முஸ்லிம் அமைப்பின் தலைவர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டதன் மூலம் இது தெளிவாகியுள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே குறிப்பிட்டுள்ளார்.


பொதுபசேனா அமைப்பையும் அதன் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரையும் பயங்கரவாதிகள் எனக் கூறி விமர்சித்தவர்கள் இதன் மூலம் சிறந்த பாடத்தை கற்றுள்ளனர். இந்த நிலைமையானது இலங்கைக்கு மாத்திரமல்லாது பிராந்திய பாதுகாப்புக்கும் மிகவும் ஆபத்தான நிலைமையாகும்.

இலங்கையில் தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் அப்பாவி முஸ்லிம் மக்கள் மத்தியில் பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் அடிப்படைவாத அமைப்புகள் பற்றி இரண்டு வருட காலமாக நாங்கள் தகவல்களை வெளியிட்டு வந்தோம்.

இந்தியாவில் இலங்கையை சேர்ந்த ஒருவர் பயங்கரவாத சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டமையானது, எம்மீது பயங்கரவாதிகள் என குற்றம் சுமத்தும் அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, டிலான் பெரேரா, விமல் வீரவன்ஸ, ராஜித சேனா ரத்ன, ரவூப் ஹக்கீம், ஜே.வி.பி, முஸ்லிம் தலைவர்கள், தயான் ஜயதிலக்க, சில பத்திரிகைகள், முஸ்லிம் பேரவை ஆகியன தரப்பினருக்கு கன்னத்தில் கொடுக்கப்பட்ட அறையாகும்.

நல்லிணக்கம், பல் கலாசாரம், மனித உரிமைகள் தொடர்பில் அஞ்சி உண்மையான பயங்கரவாதத்தை அடையாளம் காணாது இருக்கும் சில பாதுகாப்பு உயர் அதிகாரிகள் இந்த சந்தர்ப்பத்தை பிரயோசனப்படுத்தி எதிர்காலத்தில் ஏற்படப் போகும் ஆபத்தில் இருந்து நாட்டை காப்பற்ற வேண்டும் எனவும் டிலாந்த விதானகே குறிப்பிட்டுள்ளார்.-TC

No comments:

Post a Comment