இன்றைய காலகட்டத்திலே முஸ்லிம்களுக்கும் அவர்களின் வர்த்தகத்திற்கும் அவர்கள் பெரிதாக மதிக்கும் மார்க்கத்திற்கும் பேரின சமூகத்தின் தீவிர இனவாதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நெருக்கடிகள் அளப்பெரியதாகக் காணப்படுகின்றன.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் முஸ்லிம்கள் தமது சகிப்புத்தன்மையின் அளவினை கணீப்பீடு செய்து வருகின்றார்கள். உண்மையில் இஸ்லாத்தின்மீது அவர்கள் கொண்டுள்ள அளவில்லா பற்றே இச்சகிப்புத் தன்மைக்கு காரணியாக அமைந்துள்ளது எனலாம்.
இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் வந்தேறு குடிகள் என்றும் அவர்களின் அடிப்படைவாதம் இந்நாட்டை முஸ்லிம் நாடாக மாற்றிவிடக்கூடும் என்றும், முஸ்லிம்களிடம் வியாபாரம் செய்யக்கூடாது என்றும், முஸ்லிம்களுடன் எவ்விதமான தொடர்புகளும் வைத்துக் கொள்ளக்கூடாது என்றும், முஸ்லிம்களுக்கென தனியான சட்டங்கள் தடைசெய்யப்படல் வேண்டும் என்றும், முஸ்லிம்களுக்கு எதிராக வெளிப்படையான ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் என்றும், முஸ்லிம்களின் பாரம்பரிய வரலாறுகளை சிங்கள மக்கள் மத்தியில் தவறாக முன்வைத்து நேரடியாக முஸ்லிம்கள்மீது தீவிரமான கோசங்களை எழுப்பிக்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு முஸ்லிம்கள் மீது பகிரங்கமாக குறிவைத்து அவர்களை தாக்க முனைவதற்கு முஸ்லிம்கள் இந்நாட்டிற்குச் செய்த குற்றம்தான் என்ன? இந்த நாட்டு முஸ்லிம்கள் குறுகியகால வரலாறுகள் படைத்தவர்களா? அல்லது இந்நாட்டு இறைமைக்கு எதிராக செயற்படுகின்றவர்களா? இந்நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்களா? அல்லது நாட்டைப் பிரித்து தனிநாடு கோருபவர்களா? என்ற கேள்விகள் தொடராக எமக்குள் எழுந்து கொண்டு வருகின்றன. இவ்வாறான கேள்விகளுக்குக் பதில் காண எமது முஸ்லிம் சமூகம் இந்நாட்டுக்கு வருகைதந்த பூர்வீக வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டிய நிலையில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம்.
இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்பே அரேபியர்கள் இந்நாட்டோடு வர்த்தக தொடர்பில் இருந்து வந்துள்ளனர். அரேபியர் எனச் சொல்லப்படுவர்கள் முஸ்லிம்களைத் தவிர வேறொருவருமில்லை.
உலகத்தில் இஸ்லாத்தின் தோற்றம் பற்றியும் நபி (ஸல்) அவர்களின் ஆட்சி பற்றியும் அறிந்த இலங்கை மன்னன் அதனை அறிந்து கொள்வதற்காக தனது தூதுவர் ஒருவரையும் அவருடன் வீரன் ஒருவனையும் மதீனாவிற்கு அனுப்பி வைத்துள்ளான். அத்தூதுவர் மதீனாவை அடைந்தபோது உமர் (ரழி) அவர்கள் ஆட்சியிலிருந்தார்கள். அவர்களின் ஆட்சியில் இஸ்லாத்தைக் கற்றுக்கொண்டு நாடு திரும்பும் வேளையில் அத்தூதுவர் இறந்துபோகிறார். தூதுவருடன் சென்ற வீரர் நாட்டுக்கு வந்து இஸ்லாம் பற்றி மன்னனிடமும் நாட்டு மக்களிடமும் கூறியதாக வரலாறுகள் தெளிவாகக் கூறுகின்றன.
1505ம் ஆண்டு போத்துக்கேயர்கள் வியாபாரத்திற்காக இந்த நாட்டினுள் நுழைந்து நாட்டை ஆக்கிரமித்தார்கள். இவர்களைப் போன்று முஸ்லிம்கள் நாட்டை ஆக்கிரமிக்கவில்லை. முஸ்லிம்கள் இந்நாட்டு மக்களுடன் மிகவும் நெருக்கமானவர்களாகவும் விசுவாசிகளாகவும், படைத் தளபதிகளாகவும், வீரர்களாகவும், மருத்துவர்களாகவும், வியாபாரிகளாகவும், நாடுகளுக்கிடையில் உறவுகளை இணைக்கக் கூடியவர்களாகவும் காணப்பட்டார்கள். இந்த நெருக்கமும் நம்பிக்கையும்தான் இந்நாட்டு பெண்களை முஸ்லிம்கள் மணந்து இஸ்லாமிய அடிப்படையில் வாழும் சுதந்திரம் வழங்கப்பட்டது. அத்தோடு அரச சபையிலும் அவர்களுக்கு இடம் கொடுத்து மதஸ்தலங்கள் அமைத்துக் கொள்வதற்கும் முழுச்சுதந்திரமும் வழங்கப்பட்டிருந்தது.
போத்துக்கேயர்கள் தமக்குக் கீழ் இந்நாடு இருக்க வேண்டும் என எண்ணினார்கள். இதற்குத் தடையாக முஸ்லிம்கள், சிங்கள மன்னர்களிடத்திலும் சிங்கள மக்களிடத்திலும் நெருக்கம் உள்ளவர்களாகவும், விசுவாசம் உள்ளவர்களாகவும் செல்வாக்குக் கொண்டவர்களாக காணப்பட்டனர். நாட்டைவிட்டு முஸ்லிம்களை துரத்த வேண்டும் என்ற நடவடிக்கையை முதன்முதலாக போத்துக்கேயர் மேற்கொண்டனர்.
போத்துக்கேயர் இந்நாட்டை ஆண்டு கொண்டிருந்த ஆரம்ப காலப்பகுதியில் முஸ்லிம்களின் வியாபாரங்களை முடக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி செயற்பட்டனர். அது மாத்திரமல்லாது முஸ்லிம்களின் மார்க்க சுதந்திரத்திற்கும் தடை விதித்தனர்.
போத்துக்கேயரின் பிரித்தாளும் தன்மையினால் ஒரே மன்னனின் ஆட்சியின் கீழ் ஆளப்பட்டுவந்த இலங்கை ஒரே குடும்பத்திலுள்ள அண்ணன் தம்பிகளுக்குள் முரண்பாடுகளை தோற்றுவித்து ஆட்சியை முதலாம் புவனேகபாகு, மாயாதுன்னை, மத்துமபண்டார என மூன்றாகப் பிரிந்தனர். பின்னர் இவ்வாறு பிரித்ததோடு இவர்கள் நின்றுவிடாமல் முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் பிரிந்து கொண்ட மன்னர்களுக்கிடையில் சண்டைகளை தோற்றுவித்தனர். சண்டையின்போது போத்துக்கேயரிடம் உதவி கேட்கும் மன்னனிடம் முஸ்லிம்களை துரத்தும் அல்லது அவர்களை அழிக்கும் மன்னர்களுக்கு தாம் உதவுவதாக அறிவித்தனர்.
உண்மையிலேயே முஸ்லிம்களையும் அவர்களின் செல்வாக்கு மற்றும் வளர்ச்சியைக் கண்டு போத்துக்கேயர்கள் மிகவும் பயம் கொண்டவர்களாக காணப்பட்டனர். முஸ்லிம்களை துரத்தியடிக்காமல் தமது கிறிஸ்துவ மதத்தினை பரப்ப முடியாது என்பதிலும் அவர்கள் உறுதி கொண்டிருந்தனர்.

கொழும்பிலுள்ள முஸ்லிம்களை அழிப்பதற்காக போத்துக்கேயர்கள் மூன்று நிபந்தனைகளை விதித்தார்கள். (1) முஸ்லிம்களை கொழும்பிலிருந்து விரட்ட வேண்டும். (2) இந்தியாவிலிருந்து வியாபாரத்திற்காக வந்த முஸ்லிம்கள் இரு பருவகாலத்திற்கு மாத்திரமே கொழும்பில் தங்க வேண்டும். இதனை மீறுவோர் கொல்லப்படுவர். இவ்விரு நிபந்தனைகளையும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தவில்லை. (3) முஸ்லிம்கள் இலங்கையைவிட்டு வெளியேற வேண்டும் என 1626ம் ஆண்டு அறிவித்திருந்தார்கள். இதனை கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்தினார்கள்.
கொழும்பிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களில் இந்திய வம்சாவளியினர் இந்தியாவிற்குச் சென்றனர். ஏனைய முஸ்லிம்களை கண்டி செனரத் மன்னர் வரவேற்று மாவனல்ல, மடவள, அக்குரனை, கம்பளை, உக்குவெல,மகியங்கன (பங்கரகம்மான), குருநாகல் போன்ற ஊர்களில் குடியமர்த்தி பாதுகாப்பளித்தான்.
போத்துக்கேயரை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஒல்லாந்தர் 1658இல் இந்நாட்டை ஆக்கிரமித்தார்கள். இவர்களும் முஸ்லிம்கள்மீது மிகவும் பொறாமை கொண்டவர்களாகவே காணப்பட்டனர். போத்துக்கேயரைப் போன்று முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்கள். இவர்களை விரட்டுவதற்காக கண்டி மன்னன் ஆங்கிலேயரின் உதவியை நாடிச் சென்றான்.
பின்னர் 1815 ம் ஆண்டு ஆங்கிலேயேர் கண்டி இராஜ்யத்தைக் கைப்பற்றிய பின்னர் இலங்கை முழுமையாக ஆங்கிலேயரின் ஆட்சிக்குள் கொண்டுவரப்பட்டது. இவர்களது ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்கள் போத்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தரின் காலம் போன்று கடுமையானதாக இருக்கவில்லை என்பதே வரலாறு.
இவ்வாறு ஆதிகாலம் தொடக்கம் பிரித்தானியரின் காலம் வரையில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்நாட்டு மன்னர்களும், சிங்கள மக்களும் எதிராக செயற்பட்டதில்லை. சிங்களவர்களும் முஸ்லிம்களும் ஒன்றாக கலந்து வாழ்ந்து வந்துள்ளார்கள். சுதந்திரத்தினை பெற்றுக்கொள்ளும் காலம் நெருங்கிக் கொண்டுவந்த வேளையில் 1915 மே 28 இல் கம்பளையில் ஏற்பட்ட சிங்கள முஸ்லிம் கலவரம் மிகவும் கசப்பான ஒரு நிகழ்வாக இன்றுவரை பார்க்கப்படுகின்றது.
கம்பளை பள்ளிவாசலுக்கு முன்பாக சிங்களவர்களின் பெரகர சத்தங்களுடன் செல்லக்கூடாது என முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை சிங்களவர்கள் நிராகரித்தனர். இப்பிரச்சினை நீதிமன்றம் சென்றபோது நீதிமன்ற தீர்ப்பு குறித்து பள்ளிவாசலுக்கு முன்னால் பெரகரா செல்ல முடியாது என்ற கோரிக்கை முஸ்லிம்களுக்கு சார்பானதாக இருந்தது.
இதனால் இலங்கையின் வரலாற்றிலேயே முதன்முதலாக ஏற்படுத்தப்பட்ட மிகவும் மோசமான சிங்கள முஸ்லிம் காலவரமாக ஏற்பட இது மாத்திரம் காரணமாக இருக்கவில்லை. கடந்த சில வருடங்களாக முஸ்லிம்களின் வர்த்தகத்திற்கும், மார்க்க செயற்பாடுகளுக்கும் எதிராக தீவிரவாத பௌத்த தேரர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்பாடுகள் போன்றே அக்கலவரத்திற்கு சில ஆண்டு காலத்திற்கு முன்பிருந்ததே சிங்களவர்கள் மத்தியில் இனவாதக் கருத்துக்களை தீவிரவாத பௌத்த தேரர்களால் பரப்பிவந்துள்ளார்கள்.
சுமார் 1850 ஆண்டுக்குப் பின்னர் தெற்காசியாவிலே பௌத்தத்தின் எழுச்சிக்காகப் பாடுபட்ட அநாகரீக தர்மபால என்ற பௌத்த துறவி ஒருவர் இந்த நாடு சிங்களவர்களின் நாடு, இந்நாட்டிலே சிங்கள சமூகம், சிங்கள மதம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற கோசங்களை முன்வைத்துவந்தார்.

சிங்களவர்கள் அல்லாத தமிழர்கள், இந்திய தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் எனவும், இவர்களுக்கு இந்நாட்டில் எவ்விதமான உரிமையும் கிடையாது. இவர்களின் செல்வாக்கு முறியடிக்கப்படல் வேண்டும் சிங்கள அப்பாவி மக்களை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்றெல்லாம் பல வருட காலமாக சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் பற்றிய தவறான கருத்துக்களை முன்வைத்தவண்ணம் இருந்ததும் 1915இல் ஏற்பட்ட கலவரத்துக்குப் பின்னனிக்கு காரணமாக அமைந்தது எனலாம்.
இக்கலவரம் கம்பளையில் துவங்கி கண்டி, கொழும்பு, புத்தளம், இரத்தினபுரி, மஹியங்கனை போன்ற மாவட்டத்திற்கும் பரவியது. அன்றையபுள்ளிவிபரங்களின்படி 4075 வீடுகளும் கடைகளும் கொள்ளையடிக்கப்பட்டன.. 350 கடைகள் முற்றாகவே எரிக்கப்பட்டன. 17 பள்ளிவாசல்கள்தீக்கிரையாக்கப்பட்டன. 86 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.முஸ்லிம்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயங்களுக்குள்ளானார்கள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்குஉள்ளாக்கப்பட்டார்கள். பாதிக்கப்பட்ட பல பெண்கள் விபரங்களை வெளியில்சொல்லவில்லை. 1915 வரை இத்தகைய ஒரு இனக்கலவரத்தையும்பேரழிவையும் இலங்கை கண்டதில்லை
நாட்டின் சுதந்திரத்தோடு ஆங்கிலேயரின் டொமினியன் அந்தஸ்த்து என்ற விடுதலையையும் பெற்றுக்கொள்வதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு ஆதரவைப் பெற்றுத்தருமாறு டீ.எஸ். சேனா நாயக்கா அவர்களிடம் பிரித்தானியர் கேட்டனர். அப்போது முஸ்லிம்களின் ஆதவிலேயே மூன்றில் இரண்டைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது.
பாராளுமன்றத்திலே இந்த பிரேரணையை முன்வைத்து முஸ்லிம்கள் பற்றி உரையாற்றிய நாட்டின் தலைவர் டீ.எஸ். சேனாநாயக்க “முஸ்லிம்கள் பற்றிக்கூறுவதாக இருந்தால் அவர்களின் நிதானமான போக்கைக் கண்டு நாம் எல்லோரும் பாராட்டுகிறோம். சிங்கள அடக்குமுறை என்ற கதையை முஸ்லிம்கள் ஒருபோதும் கூறவில்லை. அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்ய நாம் முனைந்துள்ளோம். அவர்கள் இந்த பிரேரணையை ஆதரிப்பார்கள் என நம்புகின்றோம்” என்றார்.

சபையிலே முஸ்லிம் பிரதிநிதியாக இருந்த ரீ.பி. ஜாயா அவர்கள் “இச்சந்தர்ப்பத்திலே இனரீதியான கோரிக்கைகள் எதையும் நாங்கள் முன்வைக்க மாட்டோம். நாட்டுக்கு அரசியல் சுதந்திரம் கிடைப்பதற்கு நாங்கள் ஒருபோதும் தடையாகவும் இருக்க மாட்டோம். மக்களோடு மக்களாக நின்று நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபடுவோம். அரசியல் சுதந்திரத்தைப் பொறுத்த வரையில் எமது சமூகத்திற்கு கிடைக்கவிருக்கும் எந்த நன்மைகளையும் சலுகைகளையும் தியாகம் செய்ய நாம் தயாராக இருக்கின்றோம்” என்றார்.
இது தொடர்பில் அப்போதைய இலங்கை சோனகர் சங்கத்தின் தலைவர் சேர் றாஸிக் பரீட் அவர்கள், “நாட்டின் கௌரவ தலைவருடைய இந்த பிரேரணைக்கு சோனகர் சங்கம் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் தருகின்றது. என்னுடைய சமூகம் அவருக்கு உறுதுணையாக இருந்து வந்திருக்கின்றது. சிங்கள சகோதர சகோதரிகளைப்போல் சோனகர்களும் இத்தாய்நாட்டின் தவப்புதல்வர்களாவார்கள். எந்தப் பிரச்சினையையும் நல்லெண்ணத்துடனும் ஒற்றுமையுடனும் நாம் அணுகினால் அதைத் தீர்த்துக் கொள்ள முடியும். எமது சினேக கரங்களை எம்முனைய சிங்கள சகோதரர்களுக்கு நாம் நீட்டுகின்றோம்.” என்றார்.

முஸ்லிம்களுக்கும் இலங்கை நாட்டு சிங்களவர்களுக்கும் இடையிலான பல்வேறுபட்ட ஒற்றுமைகளும் நம்பிக்கைகளும் காணப்பட்டுவந்த வரலாறுகள் இருக்கையில், உலக மக்களின்சாந்தியையும் சமாதானத்தையும் போதித்தபௌத்தம், இன்று இலங்கையில் சாந்தியையும் சமாதானத்தினையும் அழிக்க போராடுகிறது.
வைராக்கியத்தால் வைராக்கியத்தை வெல்ல முடியாது என்ற புத்தபகவானின் போதனைகளை புறந்தள்ளி விட்டு ஒரு கையில் இனவாதத்தையும் மறுகையில் பௌத்த மதத்தையும் ஏந்தியே பௌத்தத்தைகளங்கப்படுத்துன்றது.
இதேபோலவே எதிர்வரும் 2015ம் ஆண்டினை சிங்கள முஸ்லிம் கலவரத்தின் நூற்றாண்டாக கருதும் இவ்வேளையில் அது போன்ற கலவரத்திற்காக தூபமிடும் நடவடிக்கைகளில் இன்று சிங்கள தீவிர பௌத்தர்கள் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களை நாட்டை விட்டு துரத்தவேண்டும் என்ற நோக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக அப்பாவி சிங்கள மக்களை தூண்டி விடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றும் முஸ்லிம்களும் நல்லெண்ணம் கொண்ட சிங்கள மக்களும் உண்மைத் தன்மையை அறிந்தும், உணர்ந்தும் அமைதியுடனும் சாந்தத்துடனும் இருப்பது எமக்கு பெரும் ஆறுதலைத் தருகின்றது.

No comments:
Post a Comment