- அஷ்-ஷைக் டீ.ஹைதர் அலி அல்-ஹலீமி -
அஷ்-ஷெய்க் மர்ஹூம் எம்.எம். அஹ்மத் முபாரக் அல்-மதனி (றஹ்)
கம்பஹா மாவட்டத்தில் மல்வானை எனும் எழில்மிகு ஊரில் 1949 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் திகதி அஷ்-ஷைக் மக்தூம் ஆலிம் மற்றும் உம்மு றஹிமா தம்பதியினருக்கு ஆறாவது பிள்ளையாகப் பிறந்தவர் தான் அஷ்-ஷெய்க் எம்.எம். அஹ்மத் முபாரக் அல்-மதனி (றஹ்) அவர்கள்.
தனது ஆரம்பக் கல்வியை தந்தையிடம் பெற்ற இவர், ஆரம்ப பாடசாலைக் கல்வியை மல்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலையில் தொடர்ந்தார். தரம் 08 வரை கற்று பாடசாலை ஆசிரியரகள் மத்தியிலும் சிறந்த மாணவனாகத் திகழ்ந்தார்.
தனது மகன் சிறந்த ஒரு ஆலிமாக வேண்டும் என்ற அவாவில் தந்தை மக்தூம் ஆலிம் அவர்கள், மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியில் 1963 ஆம் ஆண்டு சேர்த்து விட்டார்கள். பாடசாலையில் போன்று இங்கும் மிகுந்த பணிவுடனும் ஒழுக்கமாவும் நடந்து கொண்டதன் காரணமாக நல்ல நடத்தை, அழகிய குணம் ஆகியவற்றால் அனைவரிடத்திலும் பிரபலமானார்கள். கபூரிய்யாவின் முன்னாள் அதிபர் உஸ்தாத் அல்லாமா எஸ்.எம். ஷம்சுத்தீன் பாகவி (இந்தியா) அவர்களின் நேசத்திற்குரிய மாணவராகவும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தனது அருமைத் தந்தை அவர்களின் நேரிய வழிகாட்டலில் வளர்க்கப்பட்ட அஷ்-ஷைக் முபாறக் மதனி அவர்கள் தந்தையின் சீரிய பயிற்சிப் பாசறைக்கு கலங்கரை விளக்குப் போல திகழ்ந்தார்கள்.
1970 ஆம் ஆண்டு கலாசாலையில் இருந்து ஆலிம் பட்டம் பெற்று வெளியேறியதுடன், பண்டாரவலை ஜுமுஆ மஸ்ஜிதில் பிரதம இமாமாகவும் கதீபாகவும் கடமையாற்றினார்கள். அன்னாரது பன்முக சேவைகளால் பண்டாரவலை மக்களின் நெஞ்சில் நிறைந்த ஆலிமாகவும் இன்று வரை இடம் பிடித்துக் கொண்டார்கள்.
எந்தவொரு குத்பா உரையையும் முழுமையாக தொகுத்து, குறிப்புப் புத்தகத்தில் எழுதியே நிகழ்த்துவார்கள். அத்துடன், எந்த கருத்து வேற்றுமையான விடயங்களையும் எடுத்துக்கொள்ளாது, சமூக நலனுக்கே முன்னுரிமை அளித்து, அதுவிடயமாக அதிக அக்கறை கொண்டிருந்தார்கள்.
மௌலவி ஆசிரியர் நியமனம் பெற்று 1971 முதல் 1973 மினுவாங்கொட கல்லொலுவ மத்திய கல்லூரி மற்றும் திஹாரிய தாருஸ் ஸலாம் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் சேவையாற்றினார்கள்.
1981 ஆண்டில் கபூரிய்யாவின் அதிபர் பொறுப்பை ஏற்றது முதல் சுமார் 32 வருடங்கள் அதிபராக இருந்து அதன் வளர்ச்சிக்காக உழைத்தார்கள். ஜாமிஆ நளீமிய்யாவில் பகுதிநேர விரிவுரையாளராக இரண்டரை வருடங்கள் கல்விப்பணி புணிந்தார்கள்.
மதீனாப் பட்டதாரிகளின் தலைவராக, இஸ்லாமிய வங்கியியல் ஷரீஆ ஆலோசகராக, பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவராக, தேசிய கல்வி நிறுவனத்தின் இஸ்லாம் பாடப்புத்தக எழுத்தாளராக, சோனகர் கலாச்சார அமைப்பின் உறுப்பினராக, தொண்டு நிறுவனங்களின் ஊடாக சமூகத்திற்குப் பணியாற்றுபவராக சமூகப் பணிகளில் தடம்பதித்தார்கள்.
அவர்கள் எழுதிய நூல்கள், கட்டுரைகள், உரைகள்:
• ஹஜ்ஜும் அதன் விதிமுறைகளும் - 1983
• ஜனாஸாவும் அதன் சட்டங்களும் - 1992
• இத்தாவும் அதன் விதிமுறைகளும் - 1994
• பள்ளிவாசல்களின் சட்டதிட்டங்கள் - 2005
• காதியானிஸம் - 2010
• துஆ ஒழுங்குகளும் விதிமுறைகளும் - 2013 (தமிழ் - சிங்களம்)
• செரன்தீப் கண்ட சான்றோர்கள் - 2020
• 200க்கும் மேற்பட்ட கட்டுரைகள்
• 07 இற்கும் மேற்பட்ட சர்வதேச மாநாடுகளில்
கலந்து கொண்டுள்ளார்கள்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தூண்களில் பிரதானமானவர் என்பதுடன், அதன் வளர்ச்சிக்காக தனது இறுதி மூச்சுவரையில் அயராது உழைத்த பெருமைக்குரியவர் ஆவார்கள். 1979ஆம் ஆண்டு முதல் அதன் ஃபத்வாக்குழு உறுப்பினராக இருந்துள்ளதுடன், 1991ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவ தலைவராகவும், 2003ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையில் அதன் உதவித் தலைவர்களில் ஒருவராகவும் 2010ஆம் ஆணடு முதல் 2020ஆம் ஆண்டு இறுதி மூச்சுவரை அதன் கௌரவப் பொது செயலாளராகவும் பணி புரிந்தார்கள்.
இறுதியாக சுகயினமுற்றிருந்த போது, தனது பிள்ளைகளிடம் தனது வீட்டு நூலகத்திலுள்ள பெறுமதியான சகல நூல்களையும் ஜம்இய்யாவின் நூலகத்திற்கு வக்ப் செய்யும் படி பணித்தார்கள். தான் ஜம்இய்யாவில் சேவையாற்றிய காலத்தில் சொந்தத் தேவைக்காக பேனை, பேப்பர்கள் பாவிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் ஒரு தொகைப் பணத்தையும் கொடுத்து விடும்படியும் பணித்துள்ளார்கள் என்றால் எந்த அளவு தான் பேணுதல் உள்ளவராக இருந்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
சுமார் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக சமய, சமூகப் பணிகளில் ஈடுபட்டுவந்த ஹழ்ரத் அவர்கள். சுமார் நான்கு மாதங்கள் சுகயீனமுற்றிருந்தாலும், படுக்கையிலும் சமூகப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதற்கு அவர்களது எழுத்துக்கள் சாட்சியம். எட்டுத் நாட்களாக வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்கள் 2020.10.27 ஆம் திகதி, மாலை 4.35 மணியளவில் வபாத்தாகி இரவு 10:00 மணியளவில் குப்பியாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
அன்னார் மறைந்து ஐந்து ஆண்டுகள் கடந்தாலும் அவர்களின் அடிச்சுவடுகள், எழுத்துக்கள், சேவைகள் நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அல்லாஹ் தஆலா அவர்களைப் பொறுந்திக் கொண்டு மறுமை வாழ்வை செழிப்பாக்கி வைப்பானாக! அவர்கள் போன்ற நல்ல மனிதர்களையும் தலைவர்களையும் பின்பற்றி வாழ அல்லாஹ் துணை நிற்பானாக எனப் பிரார்த்திக்கின்றோம்! ஆமீன்…


No comments:
Post a Comment