அண்மையில் பொது பலசேனா BBS அமைப்பினர் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அதன் நிறைவேற்றுப்ப பணிப்பாளார்  டிலாந்த விதானகே பேசும் போது ஹமாஸ், IS என்பன பயங்கரவாத அமைப்புக்கள் என்றும் அவ்வமைப்புக்களால்  மத்திய கிழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது அனுதாபத்தைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். அதுமட்டுமன்றி,  முஸ்லிம் நாடுகளில் மட்டுமே அவ்வமைப்புக்கள் இருப்பதாகவும் இலங்கைக்கு அவை அவசியமில்லை என்றும் அவர்  கூறியதுடன் சூறா சபையும் உலமா சபையும் மனித உரிமைகளை மதிப்பதாக இருந்தால், அவை மனிதப் படுகொலைகளுக்கும் மற்றும் அநீதிகளுக்கும் எதிரானவையாக இருந்தால்  IS  பயங்கரவாதிகளால் இதுவரைக்கும் ஈராக்கிலும் சிரியாவிலும் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு எதிராகவும் குறிப்பாக கிறிஸ்தவ மதத்தவர்களுக்கு எதிராக அவர்கள் மேற்கொள்ளும் செயல்களுக்கு எதிராகவும் பகிரங்கமாக அறிக்கை வெளியிட வேண்டும், அப்படியில்லாவிட்டால் பயங்கரவாதத்துக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களாகவே இவற்றைச் சார்ந்தவர்களைக் கருத முடியும் என்றும் கூறினார். இது தொடர்பில் பின்வரும் கருத்துக்களை முன்வைக்க முடியும்..

1.            ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களை பயங்கரவாதிகளாக BBS கருதுவதாயின் அவர்களை எதிர்த்துப் போராடும் இஸ்ரவேலை சட்டபூர்வமான, நியாயமான அரசாக அது கருதுகிறது என்பது தெளிவான உண்மை. 1948ல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதிலிருந்து அங்குள்ள அப்பாவி முஸ்லிம்கள் மீது இஸ்ரேல் கட்டவிழ்த்துவிட்டுள்ள அட்டூளியங்களை BBS ஏற்றுக்கொள்கிறது என்றால் இஸ்ரேலுக்கும் BBS க்கும் எவ்வித வேறுபாடுமில்லை. பாலஸ்தீன சுதந்திரப் போராட்ட வீரர்களை பயங்கரவாதிகளாகக் கருதுவதாயின், இவர்கள் யார் என்று உலகமே தீர்மானிக்க வேண்டும். சியோனிஸ சக்திகளால் BBS போஷிக்கப்பட்டு வருவதனால் அவற்றுக்கு  முழுக்க முழுக்க விசுவாசமாக நடக்க வேண்டிய நிலையில் அது இருக்கிறது என்பதை எம்மால் புரிய முடிகிறது.

2.            ஈராக்கிலுள்ள கிறிஸ்தவ சிறுபான்மையினர் IS ஆல் துன்புறுத்தப்படுவதை மட்டுமன்றி உலகிலுள்ள எந்தவொரு மத சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆனால், ஈராக்கில் உள்ள கிறிஸ்தவ சிறுபான்மையினர் பாதிக்கப்படுவதை சகித்துக் கொள்ளாத  BBS மியன்மாரில் முஸ்லிம் சிறுபான்மையினர் படுமோசமாகப் படுகொலை செய்யப்பட்டு சொத்துக்கள் சூறையாடப்பட்ட போது மௌனம் சாதித்தமை அதிசயமாக உள்ளது. அதற்கும் ஒருபடி மேல் சென்று அங்கு நடந்த படுகொலைகளைக் கண்டித்த மதிப்பிற்குரிய தலைலாமாவின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது என்றும் கூறியது. TIMES சஞ்சிகையால் படுமோசமான இரத்த வெறியனாக சித்தரிக்கப்பட்ட விராதுவை மியன்மார் சென்ற BBS ன் செயலாளர், நேரடியாக சந்தித்து பரிசுகளை வழங்கியமை பௌத்த மதத்துக்கே இழுக்கு ஏற்படுத்திய நிகழ்ச்சியாகும். ஈராக்கில் இருக்கும் கிறிஸ்தவ சிறுபான்மையினரைப் பற்றிக் கவலை கொள்வது போலவே மியன்மாரிலுள்ள முஸ்லிம் சிறுபான்மையினர் பற்றியூம் BBS  கவலை கொள்ளுமாயின் அதனை மெச்சிப் போற்றலாம்.

3.            ஈராக்கிலுள்ள கிறிஸ்தவ சிறுபான்மையினருக்காகக் நீலிக் கண்ணீர் வடிக்கும் BBS இலங்கையிலுள்ள முஸ்லிம் சிறுபான்மையினருக்கெதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது. அவர்களது மதத்தையும் வேதநூலான குர்ஆனையும் அவமதிக்கிறது. அவர்கள் தமது தனியார் சட்டங்களுக்கு அமைய வாழ முடியாது என்று கூறுகிறது. அவர்கள் பற்றிய வெறுப்புணர்வை பெரும்பான்மையினரது மனங்களிலே பயங்கரமாக விதைத்து வருகிறது. அளுத்கமை கலவரத்தில் சுமார் 200 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் நாசப்படுத்தப்படுவதற்கும் 2 பேர் கொல்லப்படுவதற்கும் வேறு சிலர்  உறுப்புக்களை இழப்பதற்கும், காயப்படுவதற்கும்  காரணமாக அமைந்தது. அந்தவகையில் ஈரக்கிலுள்ள கிறிஸ்தவ சிறுபான்மையினருக்காக குரலெழுப்பும் தகுதியை BBS கொண்டிருக்கவில்லை.

எனவே, பக்க சார்பாகவும் இனவாத அடிப்படையிலும் குறுகிய நோக்கோடும் செயல்படும் BBS ன் இத்தகைய அறிக்கைகளையும் நடவடிக்கைகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

இலங்கை நாட்டிலுள்ள சகல இனங்களும் சாந்தி சமாதானமாகவும் புரிந்துணர்வோடும் சகவாழ்வைப் பேணியும் வாழும் காலம் உருவாக்கப்பட வேண்டும் என்றே தேசிய சூறா சபையும் உலமா சபையும்  கருதுகின்றன.

BBS உருவாகியதிலிருந்து இன்றுவரை அதன் செயற்பாடுகளை இலங்கையர் மட்டுமன்றி முழு உலகத்திலுள்ளவர்களும் நுணுக்கமாக அவதானித்து வருகிறார்கள். BBS ன் செயற்பாடுகள் இலங்கையை மீண்டும் ஒரு இனவாத யுத்தத்துக்கள் தள்ளிவிடுமோ எனப் பயப்படுகிறார்கள். எனவே, வெளிநாட்டு சக்திகளதும் உள்நாட்டு சுயநல அரசியல்வாதிகளதும் வலைகளில் சிக்காமல் புத்திசாதுரியமான முடிவுகளை இலங்கையர் எடுப்பார்கள் என நம்புகிறோம்.


தேசிய நலனைப் பாதுகாத்து தேசத்தைக் கட்டியெழுப்பும் அதேவேளை, முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதையும் எமது இலக்காகக் கொண்டு செயல்படும் அதேவேளை நாட்டையும் இனங்களையும் துண்டாடும் சக்திகள் சம்பந்தமாக அனைவரும் விழிப்போடு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வன்முறைகளாலும் விஷமப் பிரச்சாரங்களாலும் நாடு குட்டிச் சுவராகுவதை எவராலும் தடுக்க முடியாது. மனம் திறந்த கலந்துரையாடல்களாலும் உயர்ந்த மனப் பாங்குகளாலும் நாட்டை கட்டியெழுப்ப உழைப்போமாக!

No comments:

Post a Comment