முஸ்லீம்கள் அடிவாங்கத்தான் வேணும் அப்பதான் புத்தி வரும்

இது தான் இன்று தமிழர் மத்தியில் பரவலாக இருக்கும் பொது புத்தி கருத்து." நாங்கள் அடிவாங்கும் போது பார்த்துகொண்டிருந்தவர்கள், காட்டிக்கொடுத்தவர்கள், அரசாங்கத்துடன் கூடி கும்மாளம் போட்டவர்கள், ஏன் புலிகள் அழிக்கப்பட்ட பின்பும் அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் எதிரான 18வது சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக இருந்தவர்கள். தமிழர்கள் வாங்கிய அடியை வாங்கிப் பார்க்கட்டும்!" எங்களை அடிப்பவன் யார் என்பதல்ல பிரச்சனை அடிவாங்குவதில் சமத்துவம் மிக முக்கியம். என்ன பெருந்தன்மை எம் தமிழர்களுக்கு!

சரி முஸ்லீம்கள் மட்டும்தான் தறுசெய்தார்களா? முஸ்லீம் இனத்தையே வடக்கில் இருந்து விரட்டியடித்த எம் தமிழர்களின் இன ஒடுக்குமுறையை என்னவென்று சொல்வது? கேட்டால், அதற்கு தான் மன்னிப்பு கேட்டுவிட்டோமே என்றொரு வியாக்கியானம்! விரட்டியடித்ததற்கு காரணம் காட்டிக்கொடுத்தார்களாம்! என்னய்யா கதையிது? முஸ்லீம்கள் காட்டிகொடுத்து புலிகள் இழந்த போராளிகள் எத்தனை? தோல்வியடைந்த தாக்குதல்கள் எத்தனை?. கருணா, கேபி,பிள்ளையான், டக்கிளஸ் செய்யாத துரோகத்தை, காட்டிக்கொடுப்பையா முஸ்லீம்கள் செய்து விட்டார்கள்?. இன்றும் அவர்களை தொப்பி பிரட்டி, சோனி,முக்கால் என்று இனவாதம் பேசி இழிவுபடுத்தி பேசி வருவதில் நாம் காணும் இன்பம் என்ன? சிங்கள மக்கள் தமிழர் மேல் இனவாதம் காட்டுகிறார்கள் என்று முறையீடு செய்யும் நாம் முதலில் முஸ்லீம் மக்கள் மீது காட்டும் எமது இனவாததில் இருந்து வெளியே வருவோம்!

கிழக்கில் இருக்கும் தமிழ், முஸ்லீம் முரண்பாடு என்பது ஒரு பிரதேசத்தில் வாழும் இரு இன மக்களிற்கிடையே உள்ள பிரச்சனைகள். இவை பொது தளத்தில் உருவாகும் தமிழ், முஸ்லீம் முரண்பாட்டின் தன்மையை பொறுத்து மாறுபடும். இதை நாம் புரிந்து கொள்ளலாம்.
இலங்கையில் உள்ள மொத்த முஸ்லீம்களில் 65% -70% தெற்கிலும் 30%-35% வடகிழக்கிலும் வாழ்கிறார்கள்(கீழுள்ள அட்டவணைப்படி) . தெற்கில் வாழும் அந்த மக்களில் அனேகமானவர்கள் வர்த்தகர்கள் முழுக்க முழுக்க சிங்கள தேசத்தின் சந்தையை நம்பி வாழ்பவர்கள். அந்த பேரினவாத தேசத்தில் பரவலாக, சிறிய சமூகங்களாக சிங்கள மக்கள் மத்தியில் வாழ்பவர்கள்(அருகிலுள்ள இலங்கை படத்தின் படி ). இவ்வாழ்நிலைமூலம் இலங்கை முழுவதும் தமிழை பேசி அதை வளர்ப்பதிலும் பெரும் பங்காற்றி வருபவர்கள். சிங்கள பெளத்த அரசுடன் இணக்கமான அரசியல் என்னும் அந்த 65-70% வீத முஸ்லீம்களின் தேர்வை தமிழர்களாகிய நாம் எப்படி கேள்விக்குள்ளாக்க முடியும்!
சமீபத்தில் முஸ்லீம்கள் மீது நிகழ்ந்த திட்டமிட்ட இன ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்கள் தங்களுக்கு தெரிந்த வழிமுறைகளில் போராடினார்கள். தமது இனமக்களை அழிவில் இருந்து காப்பாற்ற எந்த மொழியில் கத்தமுடியுமோ கத்தினார்கள்.
முதலில் அந்த மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கெதிராக குரல் கொடுப்பதை விட்டு விட்டு தமிழ், சிங்கள தரப்பில் இருந்து வந்த கேள்விகளும், விளக்கங்களும் வரலாற்றில் குறிக்கப்பட வேண்டியவை!  "முஸ்லீம் என்பது தனி இனமா?முஸ்லீம் என்பவர் இஸ்லாமியத்தமிழர், முஸ்லீம் தேசியம் மதத்தேசியம், தமிழர்கள் இலங்கையர்கள் முஸ்லீம்கள் வந்து குடியேறிகள், உலக இஸ்லாத்துடன் அடையாளம் காட்டும் இலங்கை முஸ்லீம்கள் விதேசிகள்" என்று வலது, இடது பாரபட்சம் இன்றி ஆராய்சியில் இறங்கினர்.

 ஒடுக்கப்படுபவனுக்கு ஆதரவாகவும் ஒடுக்குபவனுக்கு எதிராகவும் குரல் கொடுக்காமல் இருந்து கொண்டு நீங்கள் செய்யும்  ஆராய்சி யாருக்கு வேண்டும் அய்யா? முஸ்லீம் மக்களின் போராட்டத்தின் மூலம் நாம் அனைவரும் கண்டறிந்த மிகப்பெரிய விடயம் என்னவென்றால்! மார்க்சியர்கள், இடதுசாரிகள் என்று சொல்லிக்கொண்டு மார்க்சியத்தை கொச்சைப்படுத்தி திரியும் பலர் உண்மையில் பேரினவாதிகள், இனவாதிகள்,  குறுந்தேசிய வாதிகள் என்பதைத்தான். முஸ்லீம் மக்களின் போராட்டம் முன்னோக்கி வருவதைக்கண்ட இவர்கள் எங்கே தாம் தனிமைப்பட்டு விடுவோமோ என்று பயந்து, துடக்கு கழித்துக் கொண்டு போராட வந்திருக்கிறார்கள். சிலர் தாரை தம்பட்டத்துடன் கிளம்பிவிட்டார்கள். இன்னும் சிலர் முஸ்லீம் என்னும் துடக்கை எப்படி கழிக்கலாம் என்று ஆராய்சியுடன் தமக்குள் புலம்பித்திரிகின்றனர்.
"அது சரி என்னதான் இருந்தாலும், சிங்கள பெரியண்ணை, தமிழ் சின்னண்ணைமாரை தாண்டி இந்த தம்பி முஸ்லீம் போகலாமோ? இத நாங்கள் விடலாமோ?" என்ற எண்ணம் இன்று பல சிங்கள, தமிழ் பிரிவுகளுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இதற்காகத்தான் இன்று பலரும் பல பல அமைப்பு வடிவங்களில் முஸ்லீம் மக்களுக்கு ஆதரவு என்று சொல்லி போராட வருவதன் அடிப்படை. முஸ்லீம் மக்களின் போராட்டம் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியை தந்ததோ இல்லையோ பலரின் முற்போக்கு வேசம் கலைய காரணமா இருந்திருக்கு.
தமிழரையும், முஸ்லீம்களையும், மலையக மக்களையும் ஒடுக்குவது சிங்கள பெளத்த பேரினவாதமப்பா! ஒடுக்கப்படும் நாம் எமக்குள் ஒன்று படாது ஒருவரை ஒருவர் பழிவாங்கும் மனப்பாங்குடன் இருந்தால் அனைவரின் அழிவுதான் மிஞ்சும். முஸ்லீம் மக்களுக்கெதிரான ஒடுக்குமுறைக்கெதிராக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் சில தமிழ்,சிங்கள எதிர்ப்பு குரல்களும், அரசியல் ரீதியான ஆதரவு அணுகுமுறைகளும் சற்று மகிழ்ச்சி தரும் விடயம்தான்.
அன்று உன்னை அடிக்கும் போது நான் சிரித்தேன்! இன்று என்னை அடிக்கும் போது நீ சிரிக்கிறாய்! நாளை நாம் அடிபடும் போது அவன் சிரிப்பான்! பின்பு நீ சிரிப்பதும், நீ அழுவதும் கூட அவன் குரலிலேயே இருக்கும்.
சமூகன்

No comments:

Post a Comment