முஸ்லிம் அடிப்படை வாதிகளைத் திருப்திப்படுத்த பௌத்த சாசனத்தை மாற்றுவதா ? சிங்கள ஊடகம்

nwes paper
நாட்டிலுள்ள பிக்குகளை கட்டுப்படுத்த  அரசாங்கத்துக்கு முடியாது. வரலாற்றில் எந்த அரசரும் பிக்குகளைக் கட்டுப்படுத்தியது கிடையாது.  முஸ்லிம் அடிப்படைவாதிகளை திருப்திப்படுத்துவதற்காக எமது பௌத்த சாசன சம்பிரதாயத்தை மாற்ற இடமளிக்க முடியாது. இதனை  நடத்த ஒருபோதும் விடப் போவதுமில்லை என இன்றைய ஞாயிறு சிங்களப் பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.
‘ஹக்கீம் அமைச்சரின் சமூகப் பிரிவினைவாதம்’ எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள நீண்ட கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பௌத்த விவகார அமைச்சர் ஒருவரை நியமிப்பது புத்த சாசனத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கேயன்றி பிக்குகளை முகாமை செய்வதற்கல்ல. சாதாரண பொதுமக்களுக்கு பிக்குகளை முகாமை செய்ய முடியாது. புத்த சாசன சம்பிரதாயங்களால் மாத்திரமே பிக்குகளை முகாமை செய்ய முடியும். இது இலங்கையில் மட்டுமல்ல, மியன்மார், தாய்லாந்து, லாவோஸ் மற்றும் கம்போஜியா ஆகிய சகல நாடுகளிலும் இவ்வாறுதான்.
இவ்வாறில்லாமல், பௌத்த சாசனத்தை முகாமை செய்யும் பொறுப்பை நீதி அமைச்சுக்கு ஒப்படைக்க முடியாது. இலங்கை வரலாற்றில் எந்தவொரு அரசரும் பிக்குகள் விடயத்தில் தலையிட்டதில்லை. முஸ்லிம் அடிப்படைவாதிகளை திருப்திப்படுத்துவதற்காக எமது பௌத்த சாசன சம்பிரதாயத்தை மாற்ற இடமளிக்க முடியாது. இதனை ஒரு போதும் நடத்த விடப் போவதுமில்லை.
ரவுப் ஹக்கீம் அவர்கள் இந்த அரசாங்கத்தில் தொங்கிக் கொண்டிருப்பது இன்னும் சில நாட்களுக்குத் தான். அவர் எந்த நேரத்தில் அரசாங்கத்தைப் போட்டுவிட்டுச் செல்வாறோ என்று தெரியாது. அடுத்து வரும் மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டால் இவர் நிச்சயமாக எதிர் தரப்புடன் போய்ச் சேர்வதை யாரும் தடுக்க முடியாது.
இதனால், இந்த வெற்றுத் தோட்டாக்களுக்கு சரியான பதிலை வழங்கவேண்டும். எழுச்சிபெற்று வருகின்ற பௌத்த பிரகாசத்தை அணைப்பதற்கு பல்வேறு சக்திகளுக்குத் தேவையிருக்கின்றது. இது நீதி அமைச்சரின் அறிக்கைகள், பேச்சுக்கள் மூலம் தெளிவாகின்றது. இது ஹக்கீமுடைய மட்டுமல்ல இன்னும் பல பௌத்த எதிர்ப்பு அமைப்புக்களின் தேவையும் கூட. இதனை யாரும் நிறைவேற்றிக் கொடுக்கக் கூடாது. இது தேசத் துரோகமாகும் எனவும் அக்கட்டுரையின் ஆசிரியர் கருத்துத் தெரிவித்துள்ளார். (மு)

No comments:

Post a Comment