லதீப் பாரூக்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மத ரீதியான பிரச்சினைகளைக் கையாள்வதற்காக விசேட பொலிஸ் பிரிவொன்று கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி அமைக்கப்பட்டுள்ளது. புத்தசாசன
மற்றும் மத விவகார அமைச்சின் கீழ் செயற்படப் போகின்ற இப்பொலிஸ் பிரிவை, வெறும் கண் துடைப்பாகவே பார்க்கின்றனர் இலங்கை முஸ்லிம்கள்.
சட்டத்தைத் தொடர்ச்சியாக மீறிக் கொண்டும், சிங்களவர்களை முஸ்லிம்களுக்கு எதிராகக் கிளப்பியே ஆகுவோம் எனக் கங்கணம் கட்டிக் கொண்டும் செயற்பட்டு வருபவர்களை, அரசாங்கம் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என எல்லா மூளைகளில் இருந்தும் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், செவிடன் காதில் ஊதிய சங்காகவே தொடர்ந்தும் அது இருந்து வருகிறது. இதற்கு மத்தியில் இப்போது ஒரு கண் துடைப்பாகவே விசேட பொலிஸ் பிரிவு அறிமுகமாகிறது என்றுதான் முஸ்லிம் சமூகம் கருதுகிறது.
தாம் வைத்ததே சட்டம் என்ற பாணியில், ஒரு குட்டி அரசாங்கம் போன்று இயங்கிக் கொண்டு, முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை இருப்பையே கேள்விக்குட்படுத்தி விடுபவர்கள் போன்று செயற்படுபவர்களைக் கையாள்வதற்குரிய சட்டமும், பொலிஸ் படை ஒன்றும் நாட்டில் ஏற்கனவே இருக்கின்ற போது, எதற்காக இவ்வாறு ஒரு விசேட பொலிஸ் பிரிவு?
பொலிஸாரின் கண்களுக்கு முன்னிலையிலேயே மிகவும் வெளிப்படையாக சட்டத்தை மீறுகின்ற நூற்றுக் கணக்கான சம்பவங்கள் இதுவரை பதிவாகி இருக்கின்றன. பெரும்பாலான அசம்பாவிதங்களின் போது, பொலிஸார் வெறும் பார்வையாளர்களாகவே இருந்திருக்கிறார்கள்.
பள்ளிவாயல்கள், மத்ரஸாக்கள், முஸ்லிம் உடை, உணவுகள், வியாபாரங்கள், முஸ்லிம் வியாபாரங்களைப் பகிஷ்கரிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகள், அவர்களது இறைவனைக் கேலி செய்கின்றமை என இவ்வசம்பாவிதங்கள் எத்தனையோ…!
இவற்றில் பெரும்பாலான அசம்பாவிதங்களுடன் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் மின்னஞ்சல்கள் மற்றும் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பகிரப்பட்டுள்ளன. மைய நீரோட்ட ஊடகங்களில் கூட பெருமளவில் அவை பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவது தொடர்பில், அரசாங்கம் தொடர்ச்சியாக மறுப்பையே தெரிவித்து வருகிறது.
இத்தகையதொரு பின்னணியில், எதற்காக மத ரீதியானதொரு பொலிஸ் பிரிவு என்ற கேள்வி தவிர்க்க இயலாமல் எழுகிறது. அதுவும் புத்தசாசன அமைச்சின் கீழ்…?
முஸ்லிம் அமைப்புக்கள், சமூக செயற்பாட்டாளர்களின் அமைப்பான தேசிய ஷூறா கவுன்ஸில் இது தொடர்பான தனது அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கின்றது:
புத்தசாசன அமைச்சின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மத சம்பந்தமான விசேட பொலிஸ் பிரிவு, சட்டத்தின் ஆட்சிக்கு பணி புரிவதாக அல்லாமல், மத குருமார்களுக்கும், மதத் தலைவர்களுக்கும் கட்டுப்படுகின்ற வகையில் நாட்டின் பொலிஸை மாற்றி, அதனைத் தரம் தாழ்த்தி விடும் என்றே தேசிய ஷூறா பேரவை கருதுகிறது.
ஒன்றன் பின் ஒன்றாக வந்த அரசாங்கங்களில், பொலிஸ் என்பது கடுமையாக அரசியல் அழுத்தங்களால், சட்டத்திற்கு ஏற்ப தமது கடமைகளை நிறைவு செய்வதற்குத் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மிகவும் அறியப்பட்டதோர் உண்மையாகும். சட்டத்திற்கு முரணான வகையில், வேரொரு அமைச்சின் கீழ், மதங்கள் தொடர்பாக விசேட பொலிஸ் பிரிவொன்றை அமைப்பது, சட்டத்திற்கு ஏற்ப தமது கடமைகளை செய்வதில் இருந்து பொலிஸாரை ஏமாற்றம் அடையச் செய்து விடும். சட்ட மா அதிபரும், அவருக்குக் கீழ் இருப்பவர்களுமே பொலிஸ் திணைக்களத்தைக் கட்டுப்படுத்துகின்றனர். அவர்கள் நீதிமன்ற உத்தரவுகளுக்கும், சட்டமா அதிபருக்கும் கட்டுப்பட வேண்டியவர்கள். தமது கடமைகள் தொடர்பில் அவர்கள் பாராளுமன்றத்திற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்கள். அமைக்கப்பட்டுள்ள புதிய பொலிஸ் பிரிவு மதத் தலைவர்கள் மற்றும் மத குருமார்களின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட வேண்டிய நிலையில் இருக்கின்ற நிலையில், பொலிஸ் துறையையே சிதைத்து விடும்.
சட்டம், ஒழுங்கு தொடர்பில் நாடு இன்று எதிர்நோக்கி வருகின்ற பிரதான பிரச்சினை குறிப்பிட்ட பிக்குகள் சிலர் சட்டத்தின் தண்டனைகளில் இருந்து விடுபாட்டுரிமையை அனுபவிப்பவர்கள் போன்று நடந்து வருவதுதான். குற்றவியல் சட்டத்தின் எத்தனையோ பிரிவுகளை மீறுவதற்கு இவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் கூட, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் படி பொலிஸார் அழுத்தம் வழங்கப்பட்டுள்ளனர். இவ்விதம் ஏற்கனவே இவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தண்டனைப் பயம் இன்றி நடந்து கொண்டு வருகின்ற நிலையில், மத விவகாரங்களுக்கான பொலிஸ் மற்றும் பிணக்குகளை தீர்க்கும் ஒழுங்கு என்பவை முழுமையாக இவர்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப வைக்கின்ற கைங்கர்யங்களாகவே கருதப்பட வேண்டியுள்ளன.
நாட்டின் ஜனாதிபதி மீடியா அமைப்புக்களின் தலைவர்களோடு இடம்பெற்றதொரு மாநாட்டில், மத ரீதியான ஒருமைப்பாடு நாட்டில் நிலவுவதாகத் தெரிவித்ததாக அறிய முடிகிறது. வன்முறை மற்றும் கடும்போக்குக் கொண்ட சிலரை புறம் தள்ளி விட்டுப் பார்த்தால், இது உண்மை போல் தோன்றினாலும், மத ரீதியான பொலிஸ் பிரிவு ஒன்றின் உருவாக்கம், நாட்டில் சீரியஸான மத ரீதியான பிரச்சினைகள் வளர்ந்து செல்வது போன்றதொரு பிம்பத்தையே உலக நாடுகளுக்கு வழங்கும். ஜனாதிபதி குறிப்பிட்டது போல், ‘சட்டத்தைத் தமது கைகளுக்கு எடுத்துக் கொள்பவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதே இன்றைய அவசியத் தேவையாகும். இல்லாத போது, நாட்டின் கதை, சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதையாகி விடும்.
அரசாங்க அமைச்சர்கள் கூட, விசேட பொலிஸ் பிரிவு பிரயோசனமற்றது என வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்கள். உதாரணமாக ஜாதிக ஹெல உருமய பொதுச் செயலாளரும், தொழிநுட்ப மற்றும் ஆய்வு அமைச்சருமான படாலி சம்பிக ரணவக (தேசியவாதக் கருத்துக்களுக்குப் பெயர் பெற்றவர்) சிலோன் டுடே பத்திரிகைக்குப் பின்வருமாறு தெரிவித்திருந்தார்:
“மத ரீதியான பிணக்குகளுக்காக விசேட பொலிஸ் பிரிவொன்று அவசியமில்லை. இதற்குப் பதிலாக, மத ரீதியான பிணக்குகளை உண்டு பண்ணுவோருக்கு எதிராக சட்டம் முறையாக அமுல்படுத்தப்பட வேண்டும். தேவையற்ற இந்நடவடிக்கை, எதிர்காலத்தில் சவூதியில் இருப்பது போன்ற மதப் பொலிஸொன்றை உருவாக்குவதற்கு காரணமாக அமையலாம்”. எல்லா மதப் பிரிவினருக்கும் சமமான முறையில் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், மதத்திற்கு மதம் இது தொடர்பில் வித்தியாசம் காட்டப்படக் கூடாது எனவும் குறிப்பிட்டார். பௌத்தர்களுக்கு ஒரு மாதிரியும், கிறிஸ்த்தவர்களுக்கு இன்னொரு விதமாகவும் சட்டம் அமுல்படுத்தப்படக் கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நீதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹகீம், மத ரீதியான வன்முறைகளைக் கையாள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள பொலிஸ் பிரிவில் எந்தப் பிரயோசனமும் இல்லை. இவ்வாறான பிரச்சினைகளைக் கையாள்வதற்குரிய அதிகாரம் பொலிஸ் படைக்கு ஏற்கனவே சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. பொது பல சேனா போன்ற கடும்போக்குக் குழுக்களைக் கட்டுப்படுத்துவதற்குரிய தனது உட்சபட்ச கடமையை அரசாங்கம் செய்ய வேண்டும்.
“மத ரீதியான பிரச்சினைகளை உண்டு பண்ணுகின்ற சில குழுக்களுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டே, அவற்றைத் தீர்ப்பதற்கென்று விசேட பொலிஸ் குழுவொன்றையும் அரசாங்கம் அமைக்கின்றது. இது சுத்த வேடிக்கையானது” என்கிறார் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பிரசார செயலாளர் விஜித ஹேரத்.
இதற்கு முன்னதாக, ‘பொது பல சேனாவைக் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் தவறுகின்ற போது, அதற்காக நாடு பலத்த விலையைக் கொடுக்க வேண்டி வரும்’ எனக் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் எச்சரித்திருந்தார். விசேட பொலிஸ் பிரிவொன்றை அமைப்பது மட்டும், பொது பல சேனாவினால் பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்ற முஸ்லிம்களுக்கும், ஏனையவர்களுக்கும் நம்பிக்கையை உருவாக்குவதற்குப் போதுமானதாக இருக்காது.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரிகளுக்கு அரசாங்கம் தனது ஆதரவையும் கொடுத்தாலே தவிர, நிலைமையை கட்டுப்படுத்துவது பொலிஸாருக்கு இலகுவானதாக இருக்காது என அவர் மேலும் தெரிவித்தார். பொது பல சேனா அங்கத்தவர்கள் பல நேரங்களில் பொலிஸாருடன் அவமரியாதையாகவும், தரக்குறைவாகவும் நடந்து கொண்ட போதிலும், இது தொடர்பில் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் அவர்கள் இருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதியானதாகும்.
பொது பல சேனா முஸ்லிமகளை மட்டுமன்றி, வித்தியாசமான கருத்துக்களைக் கொண்டவர்களையும் இலக்கு வைத்து வருவதைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் விளங்கக் கூடிய நடவடிக்கையை எடுக்க வேண்டியுள்ளது எனவும் அமைச்சர் ரிஷாத் வலியுறுத்தி இருந்தார்.
மஹியங்கனைப் பிரதேச சபை அங்கத்தவர் வடரேக விஜித தேரர் அவர்கள், பொதுபல சேனாவினரிடம் இருந்து தப்புவதற்காக பொலிஸ் பாதுகாப்புடன், சபைக் கட்டிடத்திற்குள் ஓடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டமை, வித்தியாசமான நிலைப்பாடுகளைக் கொண்டவர்களோடு இக்கடும்போக்குவாதிகள் எவ்விதம் நடந்து கொள்வார்கள் என்பதற்கான நல்ல உதாரணமாகும்.

No comments:
Post a Comment