வில்பத்து வனாந்தரத்தில் 22 ஆயிரம் ஹெக்டேயர் காணி சுத்தம் செய்து பள்ளிவாசல்களை நிர்மாணித்து வீடுகளை கட்டியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இன்று மாலை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலார் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
வடக்கிலிருந்து 1990 ஆம் ஆண்டு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் உடுத்திய உடையுடன் இரண்டு மணிநேரத்திற்கு வெளியேற்றப்பட்டு, அகதிகளாக வாழ்ந்து, யுத்தம் முடிவுற்ற பின்னர் சந்தோஷமாக தங்கள் ஊர்களுக்கு செல்லலாம் என்று சென்றுகொண்டிருக்கும் போது, பல இடைஞ்சல்களும், தடைகளும் அங்கு ஏற்படுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான வீடுகள் 79 பள்ளிவாசல்கள், 60 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் அழிக்கப்பட்டுள்ளது.
எனவே, எந்தவொரு திட்டமும், அபிவிருத்தியும், முன்வைக்கப்படாமல், எந்தவித உதவிகளையும் பெறாமல் இவ்வாறு மீள்குடியேறும் மக்களின் மேல் பொய்யான குற்றச் சாட்டுக்களை முன்வைத்து அந்த மக்களின் உள்ளங்களை உடைக்கும் வேலையினை பொதுபல சேனா கைவிட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தற்போது குடியேறியுள்ளவர்களுக்கு காணி உரிமைப்பத்திரம் இருக்கின்றது. வில்பத்து வனாந்தரத்தில் ஒரு அங்குலம் கூட சுத்தம் செய்யவில்லை. பழைய கிராமத்தில் இருக்கின்ற பழைய பள்ளிக்கு அருகிலேயே புதிய பள்ளி நிர்மாணிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தின் முன்னால் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் புனித அல்குர்ஆனை அவமதிக்கும் வண்ணம் கூறியிருந்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாவும் அவர் மேலும் தெரிவித்தார். (VIDEO)

No comments:
Post a Comment